2014- ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்திய வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ். 2014- 2019 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக்காலத்தில் அமைச்சர் சுஷ்மா தலைமையிலான இந்திய வெளியுறவு துறை மிகச்சிறப்பாக செயல்பட்டது என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளன. இதற்கு காரணம் தான் மட்டும் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் தனது அலுவலக அதிகாரிகள் அனைவரையும் சிறப்பாக செயல்பட வைத்தார். இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வரும் புகார் மற்றும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து தனது அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டார். இந்நிலையில் உடல்நிலை கருத்தில் கொண்டு 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இந்திய வெளியுறவு துறை பொறுப்பை முன்னாள் அமைச்சர் சுஷ்மாவிற்கு வழங்க பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் அதை முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெய்சங்கர் பதவியேற்ற நிலையில், அமைச்சராக இல்லாத நிலையில் அரசு இல்லத்தில் வசிப்பது தவறு என கருதி அரசு தனக்கு வழங்கிய டெல்லியில் உள்ள வீட்டை காலி செய்ததாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் டெல்லியில் வேறு இடத்தில் குடியேறப்போகும் முகவரியை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.