வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது! - சுற்றுலாத்துறை அமைச்சர்
நாட்டின் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் தாக்கப்படுகின்றனர். நாட்டின் முக்கியமான விவாதப்பொருளாக மாட்டிறைச்சி விவகாரம் மாறிவரும் சூழலில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புபனேஷ்வரில் நடைபெற்ற 33வது இந்திய சுற்றுலா செயல்பாட்டாளர்கள் கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர், ‘இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்கள் அவரவர் நாட்டிலேயே மாட்டிறைச்சி உண்டுவிட்டு வரவேண்டும்’ என தெரிவித்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் இவர் கேரளாவில் மாட்டிறைச்சி உண்பார்கள், உண்ணலாம் என கருத்து தெரிவித்திருந்தார். மாட்டிறைச்சி தடை விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இது ஒரு சேவல் மற்றும் காளை கதைப்போல மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். உணவுகள் பற்றி பேச நான என்ன உணவுத்துறை அமைச்சரில்லையே என பதிலளித்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் மேம்பாடு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதுகுறித்த கூடுதல் விவரங்கள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்