கர்நாடக ஐடி ஊழியர்களின் முதல் தொழிற்சங்கம்!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் ஒருங்கிணைந்து, அவர்களின் முதல் ஐடி தொழிற்சங்கத்தை அமைத்துள்ளனர்.
ஐடி துறையில் தொழிற்சங்கங்கள் அமைப்பது அத்தனை எளிமையான விஷயம் அல்ல. தொழிற்சங்கம் அமைத்துக்கொண்டால் ஐடி ஊழியர்கள் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தம் நடத்துவார்கள் போன்ற காரணங்களால் பன்னாட்டு நிறுவனங்கள் அதை ஒருபோதும் விரும்புவதில்லை. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஐடி ஊழியர்கள் சிலர் ஒன்றிணைந்து தொழிற்சங்கத்தை அமைத்துள்ளனர்.
கோரமங்கலா பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் வைத்து நடைபெற்ற இதன் முதல் கூட்டத்தில் 200 பேர் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு மணிநேரம் நீடித்த விவாதத்திற்குப் பின்னர் ஐடி ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் சமத்துவத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில், ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் யூனியன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொழிற்சங்கத்திற்கு 22 நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புரட்சிகர வணக்கங்கள் என்ற முழக்கத்துடன் தனது உரையைத் தொடங்கிய, தொழிற்சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனமுல்லா கான் இடது அரசியல் சார்புள்ளவர். பல ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளுக்குப் பின்னர் இந்த தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசும் ஐடி துறையும் நம்மைத் தொழிற்சங்கம் அமைக்க விடாமல் தடுத்து வந்திருக்கின்றன என்றும் அவர் பேசிமுடித்தார்.
இந்த தொழிற்சங்கத்தினை பதிவதற்கான வேலைகள் கூடிய விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்