இந்தியாவில் கரோனா பாதிப்பால் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000-க்கும் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், பல இடங்களில் மக்கள் ஊரடங்கை முறையாகப் பின்பற்றாமல், சாலைகளில் அலைந்து வருகின்றனர். இந்தச் சூழலில், மக்களை விதிகளைப் பின்பற்ற வைப்பதற்காக நாடு முழுவதும் இரவு பகல் பாராமல் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தடுப்பு பணிகளின் போது வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த காவல் உதவி ஆணையர் அனில் கோலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள முதல் காவல்துறை அதிகாரி இவர் ஆவார்.