மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 8 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத் தாக்கல் செய்து வந்தனர். மேலும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதையொட்டி வேட்புமனு தாக்கலின் போது பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்ததாக புகார் எழுந்தது. பர்கானா மாவட்டம் பங்கோரில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சம்பவ இடத்தில் 2 பேர் பலியானார்கள். மோதல் சம்பவத்தின் போது அங்கு இருந்த மேலும் சிலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை ஒருவர் உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் வேறு சில இடங்களில் நடைபெற்ற மோதல்களில் மேலும் 2 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பர்கானா மாவட்டம் பங்கோரில் உள்ள பிஜோய்கஞ்ச் மார்க்கெட்டுக்கு சென்று மோதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பொதுமக்களுடன் உரையாடினார். இதையடுத்து காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் ஆளுநர் ஆனந்த போஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து விட்டன. எந்த மோதலையும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த அரசியல் மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும். இதுகுறித்து நான் ஏற்கனவே முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசனை நடத்தினேன். அவரும் அரசியல் சாசன பதவி வகிப்பவர் என்பதால் அவருடன் பேசியதை வெளியில் சொல்ல முடியாது. அரசியல் சட்டப்படி ஒரு ஆளுநரிடம் என்ன எதிர்பார்க்க முடியுமோ அதை செய்வேன்" எனத் தெரிவித்தார்.