முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (9.12.2021) அவர் பெங்களூருவில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 4 பேரின் சடலங்கள் யார் யார் என அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு வீரர்களின் உடல் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கமாண்டோ வீரர்கள் சாய் தேஜா மற்றும் விவேக் குமார் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. எஞ்சியுள்ள வீரர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பான உண்மை காரணத்தை ராணுவம் ஆராய்ந்து வெளிக்கொண்டு வரும். அதுவரை யூகங்களைத் தவிர்க்க வேண்டும் என நேற்று இந்திய ராணுவம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.