பீகாரில் பள்ளியின் முதல்வருக்கும் சக ஆசிரியைக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் கௌரியா பகுதியில் உள்ள பிஹ்தா நடுநிலைப்பள்ளியின் முதல்வர் காந்தி குமாரி. ஆசிரியராக அனிதா குமாரி என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில் இருவருக்கும் பள்ளியில் இருந்த ஜன்னலை மூடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்கள் முன்னிலையில் அனிதாகுமாரியை முதல்வர் காந்தி குமாரி கண்டித்துள்ளார்.
வாக்குவாதம் முடிந்து பள்ளியின் வகுப்பறையில் இருந்து முதல்வர் வெளியேற அவருக்கு பின்னால் வேகமாக சென்ற ஆசிரியர் அனிதா குமாரி தான் அணிந்திருந்த செருப்பால் அவரை தாக்கினார். இருவரும் சண்டையிடுவதை கண்ட மற்றொரு ஆசிரியை வேகமாக வந்து அனிதா குமாரியுடன் இணைந்து முதல்வரை தாக்கியுள்ளார். வகுப்பறையில் ஆரம்பித்து வகுப்பறைக்கு வெளியே வயல்வெளி வரை இச்சண்டை நீடித்தது. மூவரும் சண்டையிட்டுக்கொள்வதை வேடிக்கை பார்த்தோர் வீடியோ எடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி கல்வி அதிகாரியிடம் கேட்ட போது, பள்ளியில் கைகலப்பு நடந்ததை உறுதி செய்துள்ளார். முதல்வருக்கும் ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாகவும் இது அரசு விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இரு ஆசிரியர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.