டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் குருநானக் ஜெயந்தி பிரார்த்தனைகளை மேற்கொண்ட விவசாயிகள் அங்கிருந்த காவலர்களுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் இனிப்புகளை வழங்கினர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சீக்கியர்களின் முக்கிய பண்டிகையான குருநானக் ஜெயந்தியை பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்ட களத்திலேயே கொண்டாடினர். காலையில் அனைவரும் ஒன்றிணைந்து சாலையில் அமர்ந்தபடி பிரார்த்தனைகளை மேற்கொண்டு பின்னர் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர். இந்த பிரார்த்தனையின்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும், மற்ற மதத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கும் இனிப்பைக் கொடுத்து குருநானக் ஜெயந்தியைக் கொண்டாடினர்.