மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், கடந்த வருட இறுதியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். டெல்லி எல்லைகளில் முகாமிட்டு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், உண்ணாவிரத போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாயிகள், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை வீடு திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது.
இதனால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்து வேளாண் சட்ட பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியதுதானே என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் போரட்டம் தொடர்பாக அவர் பேசுகையில், "அரசாங்கம், ஒரு சட்டத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்தால், அதனைத் (வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனையை) தீர்க்க முடியும். நீங்கள் (மதிய அரசு) ஏன் அதை நிறைவேற்றவில்லை? குறைந்தபட்ச ஆதார விலைக்குக் குறைவாக விவசாயிகள் வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.
சத்ய பால் மாலிக் பாஜகவில் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஒரு தானியர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, "நான் ஆளுநராக இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்காகப் பேசுவேன். விவசாயிகளின் நிலையை என்னால் தாங்க முடியவில்லை" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.