
உடல் உறுப்புகளை விற்பனை செய்து கடனை திருப்பிச் செலுத்துவதாக விவசாயி ஒருவர், மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக போராட்டம் செய்தது பேசுபொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள அடோலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சதீஷ் ஜடோல் என்பவர், வாஷிம் என்ற பகுதியில் உள்ள பரபரப்பான சந்தைக்கு கழுத்தில் பதாகை ஒன்றை தொங்கவிட்டபடி வலம் வந்துள்ளார். அந்த பதாகையில், ‘விவசாயிகளின் உடல் உறுப்புகளை வாங்குங்கள்.. சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ. 90,000 மற்றும் கண்கள் ரூ.25,000’ என்று எழுதப்பட்டிருந்தது. இவரது வினோத போராட்டம், அங்கிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்தது. பல பேர், பதாகையில் உள்ள வாசகங்களை படிக்க அவர் முன்பு கூட்டம் கூடினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சதீஷ் ஜடோல், “ விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்யும் என தேவேந்திர பட்னாவிஸ் தேர்தலுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், இப்போது அவர்கள் விவசாயிகளையே கடனை அடைக்க சொல்கிறார்கள். நாங்கள் அதை எப்படி செய்ய முடியும்?. எங்களிடம் விற்க எதுவும் இல்லை. அதனால் தான், என்னுடைய உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறேன். நான் என் சிறுநீரகத்தை ரூ.60,000க்கு விற்கிறேன். இந்த பணம், எனது கடனை அடைக்கப் போதாது என்று எனக்கு தெரியும். அதனால் தான், என் மனைவியின் சிறுநீரகத்தை ரூ.40,000க்கும் மகனின் சிறுநீரகத்தை ரூ.20,000க்கு, என் இளைய மகனின் சிறுநீரகத்தை ரூ.10,000 விற்பனைக்கு வைத்துள்ளேன்” என்று கூறினார்.
இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என விவசாயி சதீஷ் ஐடோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 2 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயி சதீஷ் ஐடோல், மகாராஷ்டிரா வங்கியில் சுமார் ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அரசாங்கம் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாது என்றும், விவசாயிகள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் சமீபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.