சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் 1956ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிறந்த அமர்சிங், காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து அக்கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தார். 1996 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்சிங், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவராக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார். தற்போது உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர், நீண்ட காலமாகவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சூழலில், உடல் நலக்கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.