
1947ஆம் ஆண்டு, இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் உருவானபோது நிகழ்ந்த வன்முறையால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனை இன்று (14.08.2021) நினைவுகூர்ந்துள்ள பிரதமர் மோடி, ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி நினைவுகூறல் தினமாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க இயலாது. இரக்கமற்ற வெறுப்பு மற்றும் வன்முறையால் லட்சக்கணக்கான நமது சகோதர, சகோதரிகள் இடம்பெயர்ந்தனர். மேலும், பலர் தங்கள் உயிரை இழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை அதிர்ச்சி நினைவுகூறல் தினமாக கடைப்பிடிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை ஆகிய விஷத்தை நீக்கி, ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், மனித வலுவூட்டல் உணர்வுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரிவினை அதிர்ச்சி நினைவுகூறல் தினம் தொடர்ந்து நினைவூட்டட்டும்" எனவும் கூறியுள்ளார்.