மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் தீர்வு எட்டப்படாத நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. அதனையடுத்து சிங்கு எல்லையிலும் கலவரம் நடந்தது. இத்தனைக்கும் மத்தியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், குழந்தைகளுக்குப் பள்ளியையும் நடத்தி வருகிறார்கள். கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட பின்னர், பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும், விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு குப்பைகளையும், பாட்டில்களையும் பொறுக்க வந்த குழந்தைகளுக்கும் விவசாயிகள் பாடம் நடத்தி வருகிறார்கள். இதில் படிக்கும் சில குழந்தைகள் இதுவரை பள்ளிக்கே சென்றதில்லை.
விவசாயிகள் நடத்தி வரும் இதுபோன்ற பள்ளியில், சிங்கு எல்லையில் 160க்கும் மேற்பட்ட குழந்தைகளும், காசிப்பூர் எல்லையில் 70 - 80 குழந்தைகளும் படித்து வருகின்றனர். இதுபற்றி அந்தப் பள்ளிகளில் பாடம் நடத்தி வரும் போராட்டக்காரர் கூறுகையில், “முதலில் நங்கள் குழந்தைகளை இங்கு இழுத்து வர வேண்டும் என நினைத்தோம். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அவர்களை இங்கு அழைத்து வர எந்த முயற்சியும் எடுக்க வேண்டிய தேவையில்லை. முதலில் எங்கள் மொழியை அவர்கள் மீது திணிக்க கூடாது என்பதற்காக, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அவர்களுக்குப் பயிற்றுவித்தோம். ஆனால் சில குழந்தைகள் பஞ்சாபி கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பியதால், பஞ்சாபி மொழியையும் கற்றுக்கொடுக்க ஆரம்பிதோம்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில், நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.