![mathan dilawar](http://image.nakkheeran.in/cdn/farfuture/PuBzDlGBpO0kdIkr0agWbfSjqQJFBOPZk-xbvyImLMk/1610365518/sites/default/files/inline-images/m-d-im.jpg)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள், சுற்றுலாவை அனுபவிக்கிறார்கள் என்றும், பறவை காய்ச்சலைப் பரப்ப சதி செய்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "போராட்டத்தில் ஈடுபட்டுவரும், 'விவசாயிகள்' என்று அழைக்கப்படுபவர்கள் நாட்டைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. ஆனால் கோழி, பிரியாணி, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சுவைத்து சுற்றுலாவை அனுபவிக்கிறார்கள். எல்லா வசதியையும் பெறுகிறார்கள். அவர்களில் போராளிகள், கொள்ளையர்கள் மற்றும் திருடர்கள் இருக்கலாம். அவர்கள் விவசாயிகளின் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அனைவரும் நாட்டை அழிக்க விரும்புகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும் டெல்லியில் போராடி வருபவர்கள், போராட்டம் நடத்தும் இடங்களில் கோழி மற்றும் பிரியாணி சாப்பிடுவதன் மூலம், நாட்டில் பறவைக் காய்ச்சலை பரப்ப சதி செய்கிறார்கள் என்றும் கூறியுள்ள எம்.எல்.ஏ.மதன் திலாவர், அடுத்த சில நாட்களில், இணக்கமான வழியிலோ இல்லை பலத்தாலோ போராட்டம் நடத்துபவர்களை அரசு அகற்றாவிட்டால், நாட்டில் ஒரு மோசமான பறவைக் காய்ச்சலை நான் எதிர்பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.
போராட்டம் நடத்துபவர்கள், சாலைகளில் ஒன்றுகூடுவதைத் தடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கலைக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.