இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது’ என மாற்றப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் ஆறாம் தேதி அறிவித்தார்.
அப்போது பிரதமர் மோடி, தயான் சந்த் பெயரில் கேல் ரத்னா விருது வழங்க நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு குடிமக்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தப் பெயர் மாற்றப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தி வயர் (the wire) ஊடகம், கேல் ரத்னா விருதுக்கு தயான் சந்த்தின் பெயரைச் சூட்ட எத்தனை கோரிக்கைகள் வந்தன என்பது குறித்தும், அந்தக் கோரிக்கைகளின் நகல்களைத் தர வேண்டும் என கேட்டும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தது.
இந்தநிலையில், தி வயர் ஊடகத்தின் மனுவிற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (f)இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 'தகவல்' என்ற வரையறைக்குள் வரவில்லை என தெரிவித்து, தயான் சந்த் கேல் ரத்னா என பெயர் சூட்ட வேண்டும் என வந்த கோரிக்கைகள் தொடர்பான விவரங்களைத் தர மறுத்துள்ளது.
இதனையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (f)இல் தகவல் என்பது, ‘பதிவுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்னஞ்சல்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆர்டர்கள், பதிவு புத்தகங்கள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், ஆவணங்கள், மாதிரிகள், மின்னணு வடிவத்தில் உள்ள தரவுப் பொருள்’ என எந்த வடிவிலும் இருக்கலாம் என கூறப்பட்டிருப்பதையும், அரசு அதிகாரிகளால், நடப்பு சட்டத்தின் கீழ் அணுகப்படக்கூடிய தனியார் நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களும் தகவல் என்ற வரையறைக்குள் வரும் என அதே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (f)-ன் கீழ் கூறப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ள தி வயர் ஊடகம், பிரதமர் அலுவலகம் அளித்த பதில் அபத்தமானது என்றும், சட்டத்திற்குப் புறம்பானது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.