மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் 14 வது நாளாக, டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசோடு ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் நேற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டமும் நடைப்பெற்றது.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். இன்று, செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர்கள், மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பரிந்துரைகளை நிராகரிப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும், "நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளை டெல்லி வருமாறு அழைக்கிறோம்" எனக் கூறியுள்ள விவசாய சங்கத் தலைவர்கள், வருகிற 12 -ஆம் தேதி, 'டெல்லி-ஜெய்ப்பூர்', 'டெல்லி-ஆக்ரா' சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், டிசம்பர் 14 -ஆம் தேதி, நாடு முழுவதுமுள்ள பா.ஜ.க அலுவலகங்களை, முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.