நாடு முழுவதும் சிலை அரசியல் தொடர்ந்துவரும் சூழலில், உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க.வினர் அம்மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அம்மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த சோவியத் புரட்சியாளர் லெனின் சிலைகள் இரண்டினை கலவரக்காரர்கள் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலையை இருவர் சேதப்படுத்தினர். தற்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் சிலை அரசியல் தொடர்ந்து வந்த நிலையில், இன்று காலை கொல்கத்தாவில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜீயின் சிலையை ஏழு பேர் கொண்ட கும்பல் சேதப்படுத்தியது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீருட் மாவட்டத்தில் உள்ள சில்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த சிலை கடந்த திங்கள்கிழமை உடைக்கப்பட்டதாகவும், சிலையை உடைத்தவர்களைக் கூடிய விரைவில் கைது செய்வோம் எனவும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளைச் சேதப்படுத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது என பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.