நிலத்தை மாடுகளையோ, டிராக்டரையோ வைத்து உழ பணம் இல்லாததால், தன் இரண்டு மகள்களை வைத்து, விவசாயி ஒருவர் நிலத்தை உழுதுள்ள அவலம் உத்திரப்பிரேதசத்தில் நடந்துள்ளது.
உ.பி. மாநிலத்தில் உள்ள ஜான்சி மாவட்டத்தின் படாகான் கிராமத்தைச் சேர்ந்தவர் அச்சேலால் அஹர்வார். இவருக்கு மொத்தம் ஆறு மகள்கள் அதில் நான்கு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இவருக்கு ரூ.1.50 லட்சம் கடன் உள்ளது. வறுமையில் வாழும் இவருக்கு, தனது நிலத்தை உழுவதற்கென மாடுகள் வாங்கவோ, டிராக்டரை வாடகைக்கு எடுக்கவோ பணம் இல்லை. இதனால் தனது இரண்டு மகள்களான ரவினா(13) மற்றும் ஷாவினா(10) ஆகியோரை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழுதார். இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். கோடை விடுமுறை என்பதால் இவர்களை நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்.
உ.பியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்ததும் விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்ததா என்பது கேள்விக்குறிதான்.