ராஜஸ்தானில் புழுதிப்புயல் வீசிவரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் புழுதிப்புயல் வீசிவருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன. அதுமட்டுமின்றி பல இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில் ஆல்வார், பரத்பூர் மற்றும் தோல்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் தாக்கம் டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை. அதிகப்படியாக ஆக்ராவில் 36 பேர் புயலின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர். பிஜ்னோர், ஷரன்பூர், பரேலி, மொராதாபாத் மற்றும் ராம்பூர் மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த புயலின் தாக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உபி முதல்வர் யோகி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கியுள்ளார்.