அவமானம் தாங்க முடியாமல் பாஜகவில் இருந்து விலகுவதாக, மேற்கு வங்க நடிகை ரூபா பட்டாச்சார்ஜி கூறினார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நடிகை ரூபா பட்டச்சார்ஜி, பாஜக கட்சியில் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டார். அதே போல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தி பதிவுகளை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு ரூபா பட்டச்சார்ஜி அளித்த பேட்டியில், “நடிகையாக இல்லாமல் நான் ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறேன். கரோனா இரண்டாவது அலையின் போது, நிறைய சமூக சேவைப் பணிகளை செய்தேன். நடந்த முடிந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால் நான் அக்கட்சியில் இருந்து விலகவில்லை. நான் சந்தித்த அவமானங்களால் கட்சியில் இருந்து விலகுகிறேன். கரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி அமைச்சர்கள் இருவரை, சிபிஐ கைது செய்தது.
இந்த சம்பவம் கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க பாஜக தலைமை மீது எனக்கு அதிருப்தி உள்ளது. பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு என்னை கடுமையாக திட்டினார். அவரிடம் அதற்கான காரணம் கேட்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்ல மறுக்கிறார். அது, எனக்கு மிகவும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்” என்றார்.