கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார், சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மறைந்தார். இவரது திடீர் மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் இந்தியத் திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள மனகுண்டி கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகையான திராக்ஷாயணி பாட்டீல் என்பவர், கண் தானம் மற்றும் இரத்த தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தினமும் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.
15 நாட்களில் 500 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கத் திட்டமிட்டு, அதாவது தினமும் 40 கிலோமீட்டர் தூரம் ஓட முடிவுசெய்து, இரண்டு வார காலத்திற்கு முன்பு தனது தொடர் ஓட்டத்தைத் தொடங்கிய திராக்ஷாயணி பாட்டீல், இன்று (14.12.2021) புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து, திருமணத்திற்குப் பிறகு ஓடுவதை நிறுத்திய திராக்ஷாயணி பாட்டீல், தற்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது இந்த தொடர் ஓட்டம் குறித்து பேசியுள்ள திராக்ஷாயணி பாட்டீல், "புனித் ராஜ்குமார் படப்பிடிப்பிற்காக தார்வாட்டில் இருந்தபோது அவரைச் சந்திக்க பலமுறை முயற்சித்தேன். ஆனால் பலனில்லை. கண் தானத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. இந்தப் பிரச்சாரத்தின் மூலம், கண் தானம் தொடர்பான விழிப்புணர்வுக்கு எனது பங்களிப்பைச் செய்கிறேன்.” என்றார்.
தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் திராக்ஷாயணி பாட்டீலை அவரது கணவரும், மூன்று பிள்ளைகளும் வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வது குறிப்பிடத்தக்கது.