உலகம் முழுவதும் ஜூன் 5ஆம் தேதியான இன்று உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பலரும் இன்றைய நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பேச, விழிப்புணர்வு ஏற்படுத்த இன்றைய தினம் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இன்று ஒரு தினம் மட்டும் போதுமா? வாழ்நாள் முழுவதும் அதைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது ஒரு குடும்பம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது தண்டேவாடா மாவட்டம். இங்குள்ள ஒரு குடும்பம் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமான பிளாஸ்டிக் பைகளை அறவே ஒதுக்கி வருகிறது. பசுமையும், சுகாதாரமும் நிறைந்ததாக இந்த பிரபஞ்சம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் இதை செய்து வருகின்றனர்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப் படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர்க் குழாயில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்பட்ட அடைப்பும், அதனால் நிகழ்ந்த பாதிப்புகளும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தை அந்தக் குடும்பத்திற்கு உணர்த்தியிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அனைவரின் கடமை என்பதால் தங்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை எனக் கூறும் அந்தக் குடும்பத்தினர், பிளாஸ்டிக்கைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியிருக்கிறது.