போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது
மும்பையில் இப்போலி நிறுவனம் தனி நபர்களிடம் ரூ 1000 பெற்றுக் கொண்டு உறுப்பினர்ச் சேர்க்கையை நடத்தியதும் அந்த உறுப்பினர்களே ஊழல் வழக்குகளில் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திலீப் லஷ்மண் சௌகுளே (34) எனும் நபர் புனே நகரில் இந்த ஆணையத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த அமைப்பிற்கு அவர் ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் என்று பெயர் சூட்டியுள்ளார். அவரது அலுவலகத்தை அரசு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டு அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பட்டியல் மற்றும் பண ரசீதுகளை கைப்பற்றினர். அவர் மீது இ.பி.கோ 170 (அரசு ஊழியரை ஆள் மாறாட்டம் செய்வது) , 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட சௌகளே உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.