![Exploded van; Everyone inside was a victim; Shocked by the attack](http://image.nakkheeran.in/cdn/farfuture/d3Qa7BEGpORk7mNQwzlET23GPTF-adltOlZrCIW3AQ8/1682509286/sites/default/files/inline-images/10_106.jpg)
சத்தீஸ்கரில் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலால் 10 காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தண்டேவாடா மாவட்டத்தில், மாவட்ட காவல்படையைச் சேர்ந்த காவல்துறையினருக்கு அம்மாவட்டத்தில் உள்ள அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் அரண்பூர் பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக்குப் பின் திரும்பினர். அவர்கள் செல்லும் பாதையில் வைக்கப்பட்ட குண்டு, வாகனம் கடக்கும்போது வெடித்ததில் 10 காவலர்கள் மற்றும் வாகனத்தின் ஓட்டுநர் உயிரிழந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பெகல், ''காவலர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நக்ஸல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அவர்களை ஒருபோதும் விடமாட்டோம்'' என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, முதல்வர் பூபேஷ் பெகலுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைப்பேசியில் பேசியுள்ளார். அப்போது, “மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்” என அவர் உறுதி அளித்துள்ளார். மாவட்ட காவல்படை என்பது மாவோயிஸ்டுகள் செயல்பாடுகளை ஒடுக்கும் வகையில் அந்த மாநில அரசால் உருவாக்கப்பட்டதாகும்.