பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவலால் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மூன்று ரூபாய் உயர்த்துவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்ற சூழலைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில் கச்சா எண்ணெய்த் தேவையைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்தது. எனவே இதனைச் சரி செய்யும் விதமாக, சவுதி தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் உற்பத்தியைக் குறைப்பதில் முடிவு எட்டப்படாத சூழலில், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாகச் சவுதி கடந்த வாரம் அறிவித்தது. சவுதியின் இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 31 டாலர் ஆகக் குறைந்தது. 1991க்கு பிறகு கடந்த 29 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு சரிவைச் சந்தித்தது இதுவே முதல்முறை ஆகும்.
இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய்யில், சுமார் 83 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதிலும், சவுதியிடம் இருந்து சராசரியாக மாதத்திற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில், சவுதி எண்ணெய் விலையைக் குறைத்தால் இந்தியாவில் எரிபொருள் விலை குறையலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.