Skip to main content

“நாகரீகம் இல்லாத இடத்தில் கூட இத்தகைய கொடுமை அரங்கேறியிருக்காது..” - மணிப்பூர் குறித்து அன்புமணி

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

"Even where there is no civilization, such cruelty would not have taken place." - Anbumani on Manipur

 

“மணிப்பூரில் இளம்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆடை கலைப்பு; பாலியல் வன்கொடுமை மனிதகுலத்திற்கு எதிரானது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார். நாகரீகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருக்காது. மணிப்பூரில் நடந்த இந்த கொடிய குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை; மனிதர்கள் அனைவரையும் தலைகுனியச் செய்பவை.

 

மே மாதம் 4-ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு 35 கி.மீ தொலைவில் நடந்த இந்த குற்றங்கள் இப்போது காணொளியாக வெளியாகியிருப்பதன் மூலம் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்த  குற்றமும் செய்யவில்லை. கலவரத்தில் தொடர்புடைய இன்னொரு பிரிவினரால் ஆயுதங்களுடன் சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்திலிருந்து தப்பிச் சென்றது தான் அவர்கள் செய்த குற்றம் ஆகும். இப்படி ஒரு குற்றம் நடந்ததே இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் உலகிற்கு தெரிகிறது என்றால், அங்கு சட்டம் ஒழுங்கு நிலைமை எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

 

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெடித்த கலவரம் உடனடியாக கட்டுப்படுத்தப்படாதது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைவதற்குக் காரணம் ஆகும். இதற்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் அச்சம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்க உளவியல் கலந்தாய்வுகளும் வழங்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்