தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துவரும் சூழலில், இம்மசோதாக்கள் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் தீங்கு ஏற்படுத்தக்கூடியது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உழவர் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபத்தொடர்பு (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகியவை இரு அவைகளிலும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன. இந்த சூழலில், மூன்றாவது விவசாய மசோதாவான அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
'தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து இனி அகற்றப்படும்' என்று கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டத்திற்கு மாற்றாக இது நடைமுறைக்கு வரும். இந்த மசோதாவின் மூலம் தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களை எவ்வளவு சேமித்து வைத்தாலும் அரசின் தலையீடு இனி இருக்காது. விவசாய சந்தையில் தனியார் ஈடுபாட்டை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறும் நிலையில், இந்த சட்டதிருத்தத்தினால் தானியங்கள், பருப்பு வகைகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களின் பதுக்கல் அதிகரித்து விலை உயர்வு ஏற்படும் அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.