இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை தங்களது மிக முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதுவர். இஸ்லாமிய மதத்தின் மிக முக்கிய 5 கடமைகளில் ஒன்றாக ஹஜ் யாத்திரை உள்ளது. இதன் காரணமாக மத்திய அரசும் மாநில அரசுகளும் பொருளாதார வசதி குறைவான மக்களுக்கு மானியம் வழங்கி குறைந்த செலவில் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன.
அதே சமயத்தில் இன்றைய இளைஞர்கள் பலரும் பயணங்களில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் லடாக் வரை பயணம் மேற்கொள்வது போன்ற சாகசப் பயணங்களை மேற்கொண்டு இணையத்தை அசத்தி வருகின்றனர். அந்த வகையில், கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவில் இருந்து சவுதியில் உள்ள மெக்காவிற்கு நடைப்பயணமாக சென்று சாதனை படைத்துள்ளார்.
இதற்காக 6 நாடுகளைக் கடந்துள்ள அவர் 370 நாட்களில் 8,640 கி.மீ. நடந்துள்ளார். கடந்த ஆண்டு ஜுன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கிய அவரது பயணம் தற்போது மெக்காவில் நிறைவடைந்துள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி எனும் பகுதியை சேர்ந்தவர் ஷிஹாப் சோத்தூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி கேரளாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு தனது நடைப்பயணத்தை தொடங்கினார். தன் பயணத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து தற்போது மெக்காவை அடைந்துள்ளார்.