காங்கிரஸ் கட்சியின் 16 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடகத் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுத்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு தயாராகும் விதமாக காங்கிரஸ் கட்சியின் 16 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழுவை மாற்றியமைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் இந்த குழுவில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட 7 பேருக்கு பதிலாக புதியதாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.