மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள். சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், நேற்றைய முந்தைய தினம் (22.11.2019) இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அஜித் பவார் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவதாக அறிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ரினைசன்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான விசாரணை இன்று (24.11.2019) காலை 11:30 மணிக்கு என்.வி. ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அவசர வழக்காக விசாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக எம்.பி சஞ்சய் காக்டே சரத்பவார் வீட்டுக்கு இன்று காலை வருகை தந்தார். அப்போது இருவரும் சந்தித்து பேசினர். இதில் சரத்பவாருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.