வெங்கடரமணப்பா ஒரு கோவில் பூசாரி. வயது 62 ஆகிறது. இந்த வயதில் அவர் ஏன் இதுபோன்ற ஒரு அற்ப காரியத்தில் ஈடுபட்டுக் கைதானார்?
கர்நாடகா – சிக்கபல்லபுராவைச் சேர்ந்த வெங்கடரமணப்பா ஒரு பூசாரி. அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உண்டு. தனது கணவரும் பூசாரி என்பதால், தேவனஹல்லி சவுடேஸ்வரி கோவில் வளாகத்தில் வசிக்கிறார் ஒரு மகள். அந்த மகளைப் பார்ப்பதற்காகச் சென்றபோதுதான், அப்படி ஒரு தவறைச் செய்திருக்கிறார், வெங்கடரமணப்பா. மகளும் மருமகனும் வெளியூர் சென்றுவிட, சவுடேஸ்வரி கோவில் பூஜைகளை, வெங்கடரமணப்பாவே முன்னின்று செய்திருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கண்ணில்பட, மிட்டாய்க் கொடுத்து, தான் தங்கியிருந்த மகளின் வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். சிறுமியின் பெற்றோர், குழந்தையைத் தேடினர். அவர்களிடம், அங்கு பூ வியாபாரம் செய்யும்பெண், பூசாரியின் வீட்டுக்குள் சிறுமி சென்றதைப் பார்த்ததாகக் கூறியிருக்கிறார். அந்த வீட்டை அவர்கள் நெருங்க, சிறுமி அழுதுகொண்டே வெளியே வந்திருக்கிறார்.
அதன்பிறகு தகவல் கிடைத்து, காவல்துறையினர் வெங்கடரமணப்பாவை விசாரித்துள்ளனர். பூ விற்கும் பெண்ணின் சாட்சியத்திலிருந்து சி.சி.டி.வி காட்சிகள் வரை, வெங்கடரமணப்பா நடத்திய பாலியல் குற்றத்துக்கு ஆதாரங்களாகிவிட, காவல்துறையினரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மருத்துவப் பரிசோதனையும் குற்றத்தை உறுதிப்படுத்திய நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பூசாரி வெங்கடரமணப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.