ஒருநாளின் அன்றாடத்தை ஓட்டிவிட எவ்வளவோ பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. அதனால், எவ்வளவு கஷ்டப்பட்டாவது நிம்மதியான வாழ்க்கையைப் பிடித்துவிட வேண்டுமென்ற குறிக்கோளுடன் வாழ்பவர்கள் அதிகம். இவர்கள் ஒருரகம் என்றால், என்னதான் கஷ்டப்பட்டாலும் மனதுக்கு நிறைவான, பிடித்த வேலையை இன்பதுன்பங்களைக் கடந்து செய்துவிட வேண்டும் என்ற இன்னொரு ரகம் உண்டு.
அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த நிதின் பியானி - பூஜா தம்பதி, மாத வருமானம் ரூ.15 லட்சம் கிடைத்துக் கொண்டிருந்த பொறியியல் வேலையை விட்டுவிட்டு, டீக்கடை ஒன்றை தொடங்கியுள்ளனர். ‘டீ’ மீதான அளவுகுறையாத காதலும், புதிதாக எதையாக செய்யவேண்டும் என்ற உந்துதலும் நாக்பூரின் சி.ஏ.சாலை பகுதியில் அவர்களை ‘சாயா வில்லா.. புத்துணர்ச்சி செய்துகொள்ளுங்கள்’ என்ற கடையைத் திறக்க உதவியிருக்கின்றன.
இந்தக் கடையில் 15 வகையான தேநீர் விற்கப்படுகிறது. தேநீர் மட்டுமின்றி பலவிதமான உணவுப் பண்டங்களும் விற்கப்படும் இந்தக் கடைக்கு, வாட்ஸ்அப் மற்றும் ஜொமடோ வழியாக ஆர்டர்கள் பெறப்படுகின்றன. ‘ஐ.பி.எம்., கோக்னிசண்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் 10 வருடங்களுக்கு மேல் வேலைசெய்த எங்களுக்கு, புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. டீக்கடை தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. மாதம் ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டுகிறோம். இந்தக் கடையை டிஜிட்டலாக மாற்றும் வேலைகளும் நடந்துவருகின்றன’ என்கிறார் நிதின்.
கனவை முதலீடு செய்யுங்கள், நிஜவாழ்வில் இன்பத்தை வருமானமாக ஈட்டுங்கள் என்ற வார்த்தையை உண்மையாக்கியிருக்கிறார்கள் நிதின் - பூஜா தம்பதி.