நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்களில் எத்தனை எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் வேட்பு மனுக்களுடன் இணைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களை ஆராய்ந்து ஜனநாய சீர்திருத்த சங்கம் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து 539 சொத்து விவரங்கள் கிடைத்துள்ளது என்றும், மூன்று பேரின் சொத்து விவரங்கள் கிடைக்கவில்லை என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்பிக்கள் 542 பேரில் சுமார் 475 எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில் பாஜக கட்சியில் மட்டும் அதிகபட்சமாக 265 எம்பிக்கள் உள்ளனர். இது அக்கட்சியின் மொத்த எம்பிக்களின் 88% ஆகும். அதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியில் 18 பேரும் கோடீஸ்வரர்கள் தான். காங்கிரஸ் கட்சியில் 42 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
அதே போல் திமுகவை சேர்ந்த 23 எம்பிக்களில் 22 எம்பிக்கள் கோடீஸ்வரர்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 எம்பிகளில் 20 பேர் கோடீஸ்வரர்கள். ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 22 எம்.பிக்களின் 19 பேரின் சொத்து மதிப்பு ரூபாய் 1 கோடிக்கும் மேல் உள்ளது. கோடீஸ்வரர்கள் எம்பிக்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் உள்ளனர். முதலிடத்தில் மத்திய பிரதேச முதலவர் கமல் நாத் மகன் நகுல் நாத் எம்பியின் சொத்து மதிப்பு ரூபாய் 660 கோடியாக உள்ளது. இரண்டாமிடத்தில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச். வசந்த குமார் சொத்து மதிப்பு ரூபாய் 417 கோடியாக உள்ளது. மூன்றாவது இடத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூர் ரூரல் மக்களவை உறுப்பினர் டி.கே.சுரேஷின் சொத்து மதிப்பு ரூபாய் 338 கோடியாக உள்ளது என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.