இறுதிக்கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (01-06-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று தேசியவாத அரசை வழங்கும். தற்போதைய அரசுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் அது ஜனநாயகத்தின் முடிவாகும் என்ற கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்தின் போது, 421 முறைக்கு மேல், ‘மந்திர்-மஸ்ஜித்’ (கோவில்-மசூதி) மற்றும் பிற பிரிவினைப் பிரச்னைகள் குறித்து பேசினார். ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி அவர் இதைச் செய்தார்.
கடந்த 15 நாட்களில் மோடி தனது உரையில் காங்கிரஸின் பெயரை 232 முறையும், தனது சொந்த பெயரை 758 முறையும் எடுத்துக்கொண்டார். வேலையில்லா திண்டாட்டம் பற்றி அவர் ஒருமுறை கூட பேசவில்லை. காந்தி படத்தைப் பார்த்த பிறகு மகாத்மா காந்தியைப் பற்றி உலகமே தெரிந்து கொண்டதாக நரேந்திர மோடி கூறினார். இதைக் கேட்கும் போது சிரிப்பாக இருக்கிறது.
ஒருவேளை நரேந்திர மோடி காந்திஜியைப் பற்றி படிக்காமல் இருக்கலாம். மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் தெரியும். ஐநா உட்பட உலகின் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் உள்ளன. மகாத்மா காந்தியைப் பற்றி நரேந்திர மோடிக்கு தெரியாவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றியும் அதிகம் அறிந்திருக்க மாட்டார். ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் படித்து தெரிந்துகொள்ள மோடிக்கு, நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும்” என்று கூறினார்.