டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (21.03.2024) விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். ஏராளமான போலீசாருடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் அரவிந்த கெஜிரிவாலுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு, வாரண்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி இது குறித்து கூறுகையில், “அமலாக்கத்துறையும், அவர்களின் எஜமானர்களான பாஜகவும் நீதிமன்றங்களை மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது. அப்படி இருந்திருந்தால், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த வந்திருக்க மாட்டார்கள். இது அரசியல் சதி, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய வந்துள்ளனர்” என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜிரிவால் அவசர வழக்காக மேல்முறையீடு செய்துள்ளார்.