4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இந்திய அணி பந்து வீசத் தொடங்கி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, இந்திய வீரர் விராட் கோலி, தவறுதலாக தோள்களில் மூன்று வெள்ளைப் பட்டைகள் கொண்ட ஜெர்ஸியை அணிந்து பீல்டிங் செய்து கொண்டிருந்தார். ஆறாவது ஓவரில் இதை கவனித்த விராட் கோலி, தான் அணிந்திருந்த ஜெர்ஸியை வெளியே அறையில் இருக்கும் சக இந்திய வீரர்கள் மற்றும் குழுவினரிடம் காண்பித்து உடை மாற்று அறைக்குச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வந்த விராட் கோலி, இந்தியக் கொடியின் மூவர்ண நிறத்தின் பட்டைகள் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2023 ஐ.சி.சி உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டிக்காக மூவர்ணப் பட்டைகள் கொண்ட ஜெர்ஸியை இந்திய அணி வீரர்கள் அணிய வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.