Skip to main content

மம்தா பானர்ஜி மருமகனிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Enforcement Directorate Interrogates Mamata Banerjee's Nephew For 9 Hours

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ஒரு விரிவான வலையமைப்பு தரகர்களைக் கொண்டு ஏஜெண்டுகள் வைத்து செயல்பட்டு, பணம் பெற்றுக் கொண்டு அரசுப் பள்ளிகளில் பல்வேறு நிலைகளில் வேலைகளை வழங்கியதாக விமர்சனம் எழுந்தது. இப்படி மேற்கு வங்கத்தில் மோசடி நடந்ததாகச் சொல்லப்படும் விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இது தொடர்பாக அமலாக்கத்துறை, "அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக அவரிடம் சில கேள்விகளைக் கேட்க இருக்கிறோம்." எனத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை இயக்குநரகத்தில் நேற்று (14-09-2023) ஆஜரானார்.

 

பின்னர், ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அமலாக்கத்துறையினர் கேள்விகளுக்குப் பதிலளித்த பின் அவர் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து அபிஷேக், "அரசியல் ரீதியாகப் போராட முடியாதவர்கள் ஏஜென்சிகளைப் பயன்படுத்துகிறார்கள். அமலாக்கத்துறையினர் என்னை செப்டம்பர் 12 அல்லது 15ல் அழைத்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணிகளின் கூட்டம் நடந்த நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். இதை வைத்து, எதிர்க்கட்சியில் பங்கு வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக குறிவைப்பது நிரூபணமாகியுள்ளது" என பாஜகவை காட்டமாக விமர்சித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்