முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பாஜகவில் இருந்து விலகி கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்தார். அதன்பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து சித்துவின் விருப்பப்படி துணை முதல்வர் பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்ததாகவும், ஆனால் அதை அமரீந்தர் சிங் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, அது தொடர்ந்து வந்தது. அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள இந்தநிலையில், இருவருக்குமிடையேயான இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்துள்ளது. அமரீந்தர் சிங் மற்றும் சித்து தலைமையில் கட்சி இரண்டாக பிரிந்துள்ளது. இதனையடுத்து இந்த உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
இந்தநிலையில் பல்வேறு சந்திப்புகள், பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், சித்துவிற்கு ஆதரவான இருவரும், அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவான இருவரும் பஞ்சாப் காங்கிரஸின் செயல் தலைவர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.