மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவது அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி அமைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக வரும் 22 ஆம் தேதி அமித் ஷா மேற்குவங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். பன்றி காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அமித்ஷா பங்கேற்கவுள்ள இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்காக கொல்கத்தா வரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மல்டா செல்வதாக இருந்தது. இந்நிலையில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான அனுமதியை தர மல்டா விமான நிலைய நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாஜக -வுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மல்டா விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அங்கு ஹெலிகாப்டரை தரையிறக்க முடியாத நிலை உள்ளது. மேலும் தற்காலிக ஹெலிபேடும் தயார் நிலையில் இல்லை. எனவே ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதி தர முடியாது” என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக கூறுகையில், வேண்டுமென்றே மம்தா பானர்ஜீ அரசு பாஜக -வை செயல்படவிடாமல் தடுக்கிறது என்றும், ஏற்கனவே ரத யாத்திரைக்கு மறுப்பு தெரிவித்து, அதை நடத்த விடாமல் செய்தது போல தற்போது இந்த பொதுக்கூட்டத்தையும் தடுக்க சதி செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.