
தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் முருகன், பொங்கல் விழாவை டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் வெள்ளை வேட்டி, கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொங்கலை துவக்கி வைத்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதைக் கண்டுகளித்தார் மோடி.
இந்த விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நடிகை மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை மத்திய அமைச்சர் முருகன் அழைத்திருக்கிறார். ஆனால், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான பாஜகவின் முக்கிய பிரமுகர் நடிகை குஷ்பு கலந்து கொள்ளவில்லை. பாஜகவை சேர்ந்த குஷ்பு இந்த விழாவில் இல்லாததும், பாஜகவில் உறுப்பினராகக் கூட இல்லாத நடிகை மீனா கலந்து கொண்டிருப்பதும் பாஜகவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக தரப்பில் விசாரித்த போது, "பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த பொங்கல் விழா, மத்திய அமைச்சர் முருகனின் ஏற்பாட்டில் நடந்தது. யாரை அழைக்க வேண்டும்; யாரை தவிர்க்க வேண்டும் என முருகன் தான் முடிவெடுத்துள்ளார். நடிகை குஷ்புவை விழாவுக்கு அழைக்காமல், நடிகை மீனாவை முருகன் ஏன் அழைத்தார் என்பதுதான் எங்களுக்கு வியப்பு. நடிகை மீனாவை பாஜகவில் சேர்க்க முருகன் முயற்சிக்கிறாரோ என தோன்றுகிறது. குஷ்புவை தவிர்த்து விட்டு மீனாவை அழைத்திருப்பதுதான் கட்சியில் ஒரே பேசுபொருளாக இருக்கிறது" என்கிறார்கள்.