மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று (20.11.2024) காலை 07.00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலோடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கதேஹரி, கர்ஹால், மீராபூர், காசியாபாத், மஜவான், சிசாமாவ், கெய்ர், புல்பூர் மற்றும் குந்தர்கி ஆகிய 9 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மீராபூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்ரோலி கிராமத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி சுமுகமாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்தும் அந்த பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இனியும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.