மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள 91 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் மார்ச் 25 வரை, கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் சுமார் 13,000 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சரியான ஆவணங்கள் இல்லாத இவைகளை தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படையினர் மற்றும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ .143.47 கோடி மதிப்புள்ள பணம், ரூ. 89.64 கோடி மதிப்புள்ள மதுபானங்கள், 131.75 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், 162.93 கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த உலோகங்கள் மற்றும் நகைகள், 12.202 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.