உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், பட்டியலின சிறுமிகள் மூவர், கால்நடைகளுக்கு உணவு சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். வெகு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள வயல்வெளியில் மூவரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதித்தபோது, இருவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. ஒரு சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மூன்று சிறுமிகளின் கைகளும் கட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அம்மாநில காவல்துறை இதனை மறுத்துள்ளது. மேலும் சிறுமிகளுக்கு விஷம் அளிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உன்னாவ் காவல்துறை கண்காணிப்பாளர், "முதல்கட்ட தகவலின்படி, சிறுமிகள் புல் வெட்ட சென்றிருந்தனர். விஷத்தின் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, கண்ணால் பார்த்தவர்கள் மற்றும் மருத்துவரின் கருத்துப்படி, அந்த இடத்தில் நிறைய நுரை காணப்பட்டது. விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த விஷயத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். முதல்கட்ட தகவலின்படி உடல்களில் எந்தக் காயமும் இல்லை. விசாரணைக்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மருத்துவமனையில் உள்ள சிறுமிக்கும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.