சாலைவிபத்துகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விபத்துகளைக் கட்டுப்படுத்த பல்வேறு கெடுபிடிகளைக் கொண்டுவந்தும் எண்ணிக்கையில் ஏறுமுகமே இருந்து வருகிறது.
இந்நிலையில், விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறது. அந்தத் தகவலில், பத்து அல்லது அதற்கு மேலே படித்தவர்கள்தான் அதிகப்படியான விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்படும் விபத்துகளில் 40% படித்தவர்களால் ஏற்படுவதாகவும், 18% விபத்துகள் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டவர்களால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த நிலை முறையே 46% மற்றும் 10%ஆக இருக்கிறது.
தமிழ்நாட்டில் தற்போது ஓட்டுநர் உரிமம் பெற பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சாலைப் பாதுகாப்பை அதிகப்படுத்த கல்வி வரம்பை எட்டாம் வகுப்பில் இருந்து பத்தாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. ஆனால், சாலை விபத்துகளில் எப்போதும் தமிழகம் முதலிடத்திலேயே உள்ளது.
‘படிக்காதவர்கள் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துவார்கள் என்ற கூற்றை இந்த தகவல் முறியடித்துள்ளது. படிப்பிற்கும், வாகனம் ஓட்டுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என அனைத்திந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கணேஷ் தெரிவித்துள்ளார்.