தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் துயர் துடைக்க அரசின் சிறப்பு நிதியில் இருந்து 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு தேர்தலை மனதில் வைத்து ஓட்டுக்காக சட்டப்படி கொடுக்கும் லஞ்சம் என்றும், இதன் மூலமாக மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு ஓட்டு லஞ்சமாக கொடுக்கிறார்கள் என்றும், அரசியல் கட்சிகள் பல்வேறு இயக்கங்கள் தொடர்ந்து கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றது.
எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள இந்த 2 ஆயிரம் ரூபாய் திட்டத்தை பற்றி நம்மிடம் ’கள்’ இயக்க தலைவர் நல்லசாமி காரசாரமாக கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் தொழிலாளர்களை, நெசவாளர்களை அடிப்படையில் கூலி வேலை செய்யும் லட்சக்கணக்கான மானமுள்ள தமிழர்களை கையேந்த வைத்துவிட்டார். எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று எந்த இளிச்சவாயனும் எடப்பாடி பழனிச்சாமியிடம் போய் கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இலவசம் கொடு, மானியம் வழங்கு , கடனை தள்ளுபடி செய் என்று கேட்கவில்லை. நாங்கள் உற்பத்தி செய்த விவசாய விலை பொருட்களுக்கு உரிய விலை என்று கேட்டோம். உடல் உழைப்பு தொழிலாளர்களூக்கு கூலி கேட்டோம். ஆனால், நீங்கள் பிச்சைக்காரரக்ள் என்று இந்த எடப்பாடி பழனிச்சாமி மக்களை பார்த்து முடிவு செய்துவிட்டார். ஒட்டுமொத்த மக்களும் கேட்பது..மீன் அல்ல;தூண்டில்தான். தூண்டில் கொடுத்தால் எங்களுக்கு மீன் பிடிக்க தெரியும். அது போல் வேலை கொடுத்தால் உழைக்க தெரியும். அப்படி உழைத்தால் பொருள் உற்பத்தி ஆகும். அந்த பொருள் சந்தைக்கு செல்லும். அதன் மூலம் உழைப்புக்கான ஊதியம் யாரிடமும் கையேந்தாமல் தானாக வந்து சேரும். ஆனால், தமிழக அரசு 2 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு குடும்பத்தை அடகு வைத்துவிட்டது. பாவம் மக்கள்..என்ன செய்வார்கள்.? அந்த பணத்தையும் வங்கியில் நின்று முட்டிமோதி வாங்கத்தான் செய்வார்கள்.’’