கல்லூரிப் படிப்பின்போது மாணவிகள் கர்ப்பமடையக் கூடாது என்ற விதிமுறையால் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது சாண்ட் ஹர்கேவல் பி.எட். கல்லூரி. இந்தக் கல்லூரியில் சேர வரும் பெண்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தில், ‘கல்லூரிக்காலத்தில் மாணவிகள் கர்ப்பமடையக் கூடாது’ என்ற விதிமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இதை மீறும் மாணவிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரியில் மூன்றுமாத கர்ப்பிணியாக இருந்த பிரதீபா மின்ச் (24) சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் பி.எட். படிப்பிற்காக சேர்ந்துள்ளார். சில மாதங்களிலேயே பிரதீபா கர்ப்பமடைந்திருப்பதை அறிந்த கல்லூரி நிர்வாகம், அவர்மீது பாகுபாடு காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த பிரதீபாவை மதிப்பெண்ணில் கைவைத்துவிடுவோம் என மிரட்டி அனைவரின் மத்தியில் நடனமாட வைத்துள்ளனர். மேலும், கடந்த பிப்ரவரி மாதத்தில் குழந்தை பிறந்த நிலையில் விடுப்பு கோரும்போது, ‘கல்லூரிக்கு விடுப்பு இல்லாமல் வரவேண்டும். இல்லையென்றால், ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் தேர்வுகளில் கலந்துகொள்ள முடியாது’ என கல்லூரி முதல்வர் அஞ்சன் சிங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து இந்திய தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு தலையிட்டு, அந்த விதிமுறையை நீக்க வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.