நிஜ வாழ்க்கையில் நடப்பதுதான் சினிமாவில் காட்சிகளாக்கப்படுகிறது. சில சமயங்களில் சினிமாவில் காட்சியாக வந்தது நிஜ வாழ்க்கையில் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாக கமல்ஹாசன் படத்தில் வரும் ஏதாவதொரு காட்சியோ, கதைக்களமோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜ வாழ்க்கையில் நடந்து பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் மாணவர்களுக்காக தேர்வெழுதிய மருத்துவர் சமீபத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா படத்தை நினைவுப்படுத்தியுள்ளது.
டெல்லி மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக இருப்பவர் மருத்துவர் படேல் நிவில் விஷ்ணுபாய். இவர், பல்வேறு மருத்துவ மாணவர்களுக்காக, அவரவர் பெயர்களில் தேர்வெழுதி அவர்களைத் தேர்ச்சி பெறச் செய்துள்ளார். இதற்காக சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் கணிசமான தொகையையும் வசூல் செய்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவந்த மருத்துவர் நிவில் மீது புகார் எழுந்த நிலையில், தேசிய தேர்வு வாரியம் நடத்திய விசாரணையில் உண்மை நிரூபணமாகி உள்ளது.
விசாரணையின் போது மருத்துவர் நிவில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு நிவில் எந்தத் தேர்வுகளிலும் கலந்துகொள்ளக் கூடாது என்ற தண்டனையையும் அவர் வரவேற்று ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் நடித்து வெளியான வசூல்ராஜா படத்தில், கமல்ஹாசனுக்காக மருத்துவர் மார்க்கபந்து (கிரேஸி மோகன்) தேர்வெழுதுவார். இதன்மூலமாக தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து டீன் பிரகாஷ்ராஜைத் திணறடிப்பார் நடிகர் கமல்ஹாசன். இதேபோலவே, டெல்லியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.