ஷாப்பிங் அழைத்துச் செல்லாததால் 11வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் சாம்ராஜ்பேட் காவல் எல்லைக்குள் வரும் அனந்தபுராவில் வசித்து வரும் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தைகளில் ஒருவரான வைஷாலி (11) தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நடைபெறவிருந்த திருவிழா ஒன்றுக்காக வைஷாலிக்கு அவரது தந்தை ஆடை வாங்கி கொடுத்திருந்தார். ஆனால் சகோதரிகளான மற்ற இரண்டு குழந்தைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்காததால் அவர்களுக்கு ஆடை வாங்குவதற்காக பெற்றோர் ஷாப்பிங் சென்றுள்ளனர்.
அப்பொழுது வைஷாலி தன்னையும் அழைத்துச் செல்லும்படியும் தனக்கு மேலும் ஒரு ஆடை வேண்டும் என்றும், பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் வைஷாலியை விட்டுவிட்டு மற்ற இரண்டு குழந்தைகளை மட்டும் கூட்டிக்கொண்டு தம்பதியினர் ஷாப்பிங் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள்களுக்கு துணி வாங்க கடைக்கு சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபொழுது வீட்டில் மகள் தூக்கில் தொங்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.