சாதி என்ன என்று தெரியாததால் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை கிராமவாசிகள் அடக்கம் செய்ய மறுத்த நிலையில், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவற்ற மூதாட்டியின் உடலை தன் பிள்ளைகளின் உதவியுடன் அடக்கம் செய்து இந்த உலகில் மனிதாபிமானம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார். இச்செயலால் எம்எல்ஏவை பலர் பாராட்டி வருகின்றனர்.
ஒடிஷா மாநிலத்திலுள்ள சுதாமல் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமனபள்ளி கிராமத்தில் ஒரு 80வயதுடைய ஏழை மூதாட்டியும், அவரின் 50வயது மைத்துனருடன் சாலை ஓரத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் அந்த கிராமத்தில் பிச்சை எடுத்தும், அங்கிருக்கும் வீடுகளில் உணவுகளை பெற்றும் வாழ்ந்து வந்தனர். கிராமத்தார்களுக்கு இவர்களின் எதுவும் தெரியாமலே இருந்திருக்கிறது. இந்நிலையில், புதன் கிழமை காலை அந்த மூதாட்டி இறந்துள்ளார். ஆதரவற்ற அந்த மூதாட்டியின் சாதி தெரியதால் தொட்டு தூக்கி அடக்கம் செய்ய ஊர் மக்கள் மறுத்தனர்.
இத்தகவலை அறிந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ரெங்காலி தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ ரமேஷ் பட்டுவா என்பவர் தன் பிள்ளைகளுடன் வந்து அந்த மூதாட்டியை தோளில் சுமந்து, ஒரு மகனாக செய்ய வேண்டிய அனைத்து காரியங்களும் செய்து அந்த மூதாட்டியை அடக்கம் செய்தார்.
இதுகுறித்து அந்த எம்எல்ஏ தெரிவிக்கையில்," இந்த கிராமத்தில் வேறு சாதி என்றால் அவர்களை தொட மாட்டார்கள் அதனால் நானே வந்து அந்த மூதாட்டிக்கு ஒரு மகனாக இருந்து அடக்கம் செய்தேன். பெரும்பாலான மக்கள் இந்து முறைப்படி புதைத்து வருவதால், அதன்படியே செய்தேன். ஏழை, பணக்காரர் யாராக இருந்தாலும், இறந்தபின் மரியாதைடன் நடத்தப்படுவது அவசியமாகும். அதை நான் ஒரு மனிதராக மனிதநேயத்துடன் செய்திருக்கிறேன்” என்று கூறினார்.