இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தின் மஹோபாவில் இன்று காணொளி வாயிலாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தைத் தொடங்கி வைத்ததோடு, சில பெண் பயனாளர்களுக்கு எல்பிஜி இணைப்பையும் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், "நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் விறகடுப்புகள் அல்ல, எரிவாயு அடுப்புகள் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வில் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதானது மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என மாற்றம் செய்யப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.
இதுதொடர்பாக அவர், "ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்தை நினைவுகூர விரும்புகிறேன். அவரது பெயர் கேல் ரத்னா விருதுக்குச் சூட்டப்பட்டுள்ளது. இது விளையாட்டில் ஈடுபட விரும்பும் லட்சக்கணக்கானோரை உத்வேகப்படுத்தும். இந்த ஒலிம்பிக் நமது வீரர்கள் பதக்கங்களை மட்டும் வெல்லவில்லை. இந்திய விளையாட்டிற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதற்கான சமிக்கையையும் அளித்துள்ளனர்" என்றார்.